ஏகஇறைவனின் திருப்பெயரால்...
إِلاَّ الَّذِينَ تَابُواْ وَأَصْلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَـئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன். 2:160
தவ்பாவை நாடும் உள்ளம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
எல்லா மக்களும் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உலகில் வாழும் காலத்திலேயே சொர்க்கம் செல்வதற்கு தேவையான நற்செயல்களை செய்து தீயசெயல்களை தடுத்துக் கொள்வதற்காக ஏராளமான தூதர்களை மக்களிலிருந்தே தேர்வு செய்து அவர்களுக்கு முன்மாதிரியாக இறைவன் வாழச் செய்தான்.
இறைவன் அறிவித்துக் கொடுத்தப் பிரகாரம் இறைத்தூதர்கள் அனைவரும் நல்லதை ஏவித் தீயவைகளைத் தடுத்து வாழ்ந்து காட்டியதுடன் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் அவ்வப்பொழுது சில தவறுகள் ஏற்படும் பொழுது மக்கள் அறியும் விதமாகவே இறைவனிடம் பாவமன்னிப்பு கோரக் கூடியவர்களாக இருந்தார்கள். நீங்களும் தவறிழைத்து விட்டால் இதேப் போன்று இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்றும் கூறினார்கள்.
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை சிறு சிறு தவறுகளைச் செய்து விட்டு இறைவனிடம் அழுது பிரார்த்தித்த சம்பவங்கள் திருமறைக்குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக காணப்படுகின்றன.
நபிமார்கள் செய்ததுப் போன்ற சிறு சிறு தவறுகளுக்குத் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் பெரும் பாவங்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்ற சிந்தனை மக்களுடைய மனதில் வந்து விடக்கூடாது என்பதற்காக தனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக அவர்களுக்கு முந்தைய யூத சமுதாய மக்களில் ஒருவர் 99 கொலைகளை செய்தப் பின்னர் அவரது உள்ளம் தவ்பாவை நாடியதையும. அதை ஏற்று இறைவன் அவருக்கு பாவமன்னிப்பு வழங்கிய சம்பவத்தையும் சொல்லிக்காட்டினான்.
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் 99 பேரை கொலை செய்திருந்தார்.பிறகு அவர் (இம்மாபெரும் கொடிய பாவங்களிலிருந்து தவ்பாச் செய்து மீளுவதற்குரிய வழி முறைகளைத் தெரிந்து கொள்வதற்காக பூமியிலேயே மிகப்பெரிய அறிஞர் யார் என விசாரித்து பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரைச் சேர்ந்த ஓர் அறிஞரை பூமியில் மிகப்பொரிய அறிஞர்(இவர் தான்)என அவருக்குக் கூறப்பட்டது அவரிடத்தில் சென்று தான் 99 பேரைக் கொன்று விட்டதைக்கூறி தனக்கு தவ்பா ( பாவமன்னிப்பு ) கிடைக்குமா ? என்றுக்கேட்டார். அதற்கு அவ்வறிஞர் கிடைக்காது என்று பதிலளித்தார் உடனே அவரையும் அவ்விடத்திலேயேக் கொன்றார். அவரோடு சேர்த்து 100 கொலைகள் ஆகி விட்டது அத்துடன் அடங்காமல் அவர் உள்ளம் தவ்பாவை நாடியது. அதனால் மீண்டும் இப்பூமியில் யார் மிகப்பெரிய அறிஞர் என தேடத் தொடங்கினார் அவருக்கு ஓர் அறிஞரை அறிமுகப் படுத்தப்பட்டது. அவரிடத்தில் சென்று தான் 100 பேரைக்கொன்றது பற்றிக் கூறி எனக்கு தவ்பா உண்டா? எனக்கேட்டார் அதற்கவர் ஆம் உண்டு, உமக்கும் தவ்பாவுக்கும் மத்தியில் யார் தடையாக இருக்க முடியும்? நீ இன்ன இன்ன இடங்களுக்கு செல்! அங்கு அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கும் நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நீயும் வணங்கு ! உனது பழைய இடத்திற்கு திரும்பி செல்லாதே ! இது கெட்ட பூமியாகும் எனக் கூறினார். அதன் படி அம்மனிதர் பாதி தூரம் நடந்திருப்பார் அதற்குள் அவருக்கு மரணம் வந்து விட்டது. அவரது உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் ரஹ்மத்துடைய(இறையருளின்) வானவர்களுடன் அதாபுடைய ( இறை வேதனையின் ) வானவர்களும் போட்டி போட்டுக் கொண்டனர். அவர் தவ்பாச் செய்தவராக, தன் இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவராக வந்தார் என ரஹ்மத்தின் வானவர்களும், அவர் எந்த நற்செயல்களையும் செய்யவில்லை என அதாபுடைய வானவர்களும் வாதாடினர் அப்பொழுது ஒரு மலக்கு மனிதனின் வடிவத்தில் அவர்களிடம் வந்தார். அவரை அவர்கள் தங்கள் மத்தியில் தீர்ப்பளிப்பவராக ஆக்கிக் கொண்டார்கள். அவர் கூறினார். அவர் வந்த மற்றும் போக வேண்டிய பூமிகளை அளந்து பாருங்கள் அவ்விரண்டு பூமிகளில் எதற்கு நெருக்கமானவராக இருக்கிறாரோ அவர் அதற்கே உரியவர் என்றுக் கூற அதன் படியே அவர்கள் அளந்தார்கள். அவர் தவ்பாவை நாடி வந்த பூமிக்கே மிக நெருக்கமானவராக இருந்தார். ஆகவே ரஹ்மத்தின் மலக்குகளே அவருடைய உயிரை கைப்பற்றினர் என்று அல்லாhஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : புகாரி, முஸ்லிம்
புகைப் பிடித்தோம், மது அருந்தினோம், அதற்கடுத்து விபச்சாரத்தை நாடினோம், அதற்கடுத்து சூது விளையாடினோம் இவைகளை அனுபவிப்பதற்காகத் திருடினோம், காசுக்காக கொலை செய்தோம் என்றெண்ணி முன்னர் செய்தப் பாவங்களை பட்டியலிட்டுப் பார்த்து இத்தனைப் பாவம் செய்த நமக்கா பாவமன்னிப்பு கிடைக்கப் போகிறது ?
- ஒரு தடவை தண்ணி அடிச்சாலும், நூரு தடவை தண்ணி அடிச்சாலும் நரகம் ஒன்று தான்,
- ஒருதடவை விபச்சாரம் செய்தாலும் நூறு தடவை விபச்சாரம் செய்தாலும் நரகம் ஒன்று தான்
- ஒரு கொலை செய்தாலும் நூரு கொலை செய்தாலும் நரகம் ஒன்று தான்
என்றெல்லாம் தமக்குத் தாமே வேதாந்தம் பேசிக்கொண்டு எஞ்சி இருக்கும் சிறிது காலத்தையும் இதே வழியில் இன்பம் அனுபவித்து விட்டு சென்று விடுவோம் என்று தவ்பாவை நாடிய உள்ளத்தை கழுவித் தூய்மையாக்க வேண்டியவர்கள் மீண்டும் சாக்கடையில் தோய்த்துக் கொண்டிருப்பர்.
நரகம் என்ற தீர்ப்பு ஒன்று தான் ஆனால் அதில் வேதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும் நெருப்பால் தோல்கள் கருகியப்பின்னர் மறு தோல் போர்த்தி மீண்டும் மீண்டும் எரிக்கப்படும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
பாவம் செய்த மனிதன் பாவமன்னிப்புக் கோரி எனது அருளைப் பெற்று நேர்வழிப் பெற மாட்டானா என்று இறைவன் நாடுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான்., ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அது அதிகமாக இருக்கும்.... என்றுப பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். நூல்: முஸ்லிம்.
எப்பொழுது உள்ளம் தவ்பாவை நாடுகின்றதோ அப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட வேண்டும் அவ்வாறு செய்து விட்டால் அவர் பட்டியலிட்டுப் பார்த்துத் தயங்கும் அவருடைய முந்தைய எண்ணற்றப் பாவங்களை மன்னிப்பதுடன் அவைகளை நன்மைகளாகவும் மாற்றி விடுவதாக இறைவன் கூறுகிறான்.
திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன். 25:70.
சில நிபந்தனைகள்
இன்னும் கொஞ்சம் அனுபவித்து விட்டு பாவமன்னிப்புக் கோரலாம் என்று கால தாமதம் செய்யக் கூடாது காரணம் எவரது உள்ளம் எப்பொழுது தவ்பாவை நாடியது என்பதையும், என்ன நோக்கத்தில் அவர் அதை தள்ளிப் போட்டுக் கொண்டு சென்றார் என்பதையும் இறைவன் துல்லியமாக அறியக் கூடியவன் என்பதால் மேற்காணும் இஸ்ரவேலர் சம்பவத்தை தவறாக பயன்படுத்திட முயற்சிக்கக் கூடாது.
இதற்கு மேலும் என்னால் பாவகாரியங்களில் ஈடுபடமுடியும் என்றளவுக்கு ஆரோக்கியம் இருக்கும் பொழுதே பாவமன்னிப்புத் தேட வேண்டும் அந்த இஸ்ரவேலர் 99 கொலைகளை செய்து முடித்திருந்தாலும் ஆரோக்கியம் குன்றாதவராகவே இருந்தார் ஆரோக்கியம் குன்றாதவராக இருந்த காரணத்தால் தான் இன்னொரு கொலையும் அவரால் செய்ய முடிந்தது.
இதற்கு மேல் எழுந்து நடக்க முடியாது என்ற நிலையில் ஆகாரம் டியூப் மூலம் மூக்கு வழியாக ஏறும் நிலையை அடைந்ததன் பின்னர் ஒருவர் கூறும் தவ்பா மரண பீதியில் உளறும் உளறல்களில் அடங்கி விடும் தவ்பாவில் சேராது. காரணம் நானே இறைவன் என்றுக் கூறி படாடோபமாக வாழ்ந்த ஃபிர்அவ்ன் மூக்கு வழியாக கடல் நீர் உட்புகுந்து மூச்சுத் திணறும் தருவாயை அடைந்தப் பின்னர் கூறிய தவ்பாவை இறைவன் நிராகரித்து விட்டான் என்பது இதற்கு உரிய ஆதாரமாகும்.
அதற்கான கீழகாணும் திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரம்.
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். திருக்குர்ஆன். 4:18
(மரணத்தருவாயில்) தொண்டைக்குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை அல்லாஹ் தன் அடியானின் தவ்பாவை ஏற்றுக்கொள்கிறாhன் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: திர்மிதி
இதுவே பாவமன்னிப்புத தேடுவதற்கான அளவு கோல் பாவகாரியங்களின் எண்ணிக்கை அளவுகோல் இல்லை.
திருந்தியப் பின்னர் பழைய வழிக்கு திரும்பி விடக் கூடாது என்பதற்காகவே அந்த அறிஞர் பழைய பூமிக்கு திரும்பி விடாதே என்றுக் கூறுகிறார். வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல அந்த ஊரிலேயே அந்த மக்களுடனேயே தங்கி வாழலாம் ஆனால் அந்த ஊரில் வணக்க வழிப்பாடுகளுடன் உள்ள மக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பட்சத்தில் அது அவரால் வழி கெடுக்கப்பட்டவர்ளுக்கும், அவரை வழிகெடுத்தவர்களுக்கும் முன்மாதிரியாகி விடும். இதல்லவோ வாழ்க்கை என்று இவரைப் பார்த்து இவரால் வழிகெடுக்கப்பட்டவர்களும், இவரை வழிக் கெடுத்தவர்களும் தங்களை சீர் திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.
திருந்தியப் பின் மீண்டும் பழைய வழிக்கு ( பாவச் செயல்களின் பக்கம் ) திரும்பி விட்டால் அவர் மீது இறைவனின் கடும் கோபம் ஏற்படும்.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு...16:106
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்