புதன், 7 செப்டம்பர், 2011

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! ''என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக்கூறினார்கள்... இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1742.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஒருவர் புனித தலத்தில் இருக்கும் பொழுது இறைவன் தடை செய்த எந்த ஒன்றையும் எந்தளவுக்கு செய்யத் துணிய மாட்டாரோ அந்தளவுக்கு புனித தலமல்லாத மற்ற இடங்களிலும் மனித உயிர்கள், அவர்களது உடமைகள், அவர்களது மான மரியாதையின் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது புனித தலத்தை மதிப்பதுப் போன்று மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றுப் பெருந்திரளாகக் குழுமி இருந்த அரஃபா மைதானத்தில் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினார்கள். 

அதிகார பலத்தைக் கொண்டோ, பண பலத்தைக் கொண்டோ, படை பலத்தைக் கொண்டோ, அல்லது தவறான தகவல்களின் அடிப்படையிலோ மேற்காணும் அநீதிகளில் எதையாவது ஒன்றை இழைத்து விட்டால் ? அதற்கான தீர்வு என்ன

  • அவருடைய மான மரியாதைக்கு பங்கம் விளைவித்திருந்தால் அதற்காக அநீதி இழைக்கப்பட்டவரிடம் நேரடியாக சென்று வருத்தம் தெரிவித்துக்கொண்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
  •  
  • அவருடைய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தி இருந்தால் இழப்புககு தகுந்தாற்போல் ஈடு கட்டி விட்டு  படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
  • யாரையாவது கொலை செய்திருந்தால் அரசிடம் சரணடைந்து அரசு மூலம் கொலையாளிகளின் வாரிசுகளிடம் மன்னிப்பையோ, அல்லது நஷ்ட ஈட்டுத்தொகையையோக் கொடுத்துவிட்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

மிகவும் சாமார்த்தியமாக தான் செய்த தவறுக்கு நியாயாம் கற்பித்தக் கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தால் பாதிக்கப்பட்டவர் இறைவனிடம் கையேந்தி இறைவா ! நீ இவரைப் பார்த்துக் கொள் என்று கண்ணீர் மல்க ஒப்படைத்து விட்டால் இறைவன் அவருக்கு அதேப் போன்றதொரு இழப்பை அல்லது அதற்கு மேலான ஒன்றை தன்னுடைய திறமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதவாறு அவரை விட திறமைசாலி ஒருவர் மூலமாக அல்லது அவருக்கு அறியாப் புறத்திலிருந்து அவர் சற்றிலும் எதிர்பாராத வகையில் திடீரென ஏற்படுத்தி விடுவான் அவ்வாறு ஏராளமான சம்பவங்கள் நம் கண் முன் நிகழ்ந்திருக்கிறது. காரணம் அநீதி  இழைக்கப்பட்வருடைய பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரை இல்லை.
 
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். நூல்: புகாரி  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 2448. 

இவ்வாறு மாட்டிக் கொண்டவர்களில் சிலர் இது இன்னாருக்கு நாம் செய்த துரோகத்தின் காரணத்தினால் நிகழ்ந்திருக்கலாம் அவர் இறைவனிடம் கையேந்திருப்பார் அதனால் இது இறைவனின் தீர்ப்பாக இருக்கலாம் என்று அஞ்சிக் கொண்டு அதன் பிறகு நற்செயல்களை முற்படுத்துவார் ஆனாலும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்க வழி செய்யாமல் தன் தவறை மறைத்தே வாழ்வார் நற்செயல்களை மட்டும் முற்படுத்துவார்.
அதற்கு காரணம்.

நான் செய்தது சரி தான் என் மீது எவ்வித தவறுமில்லை என்று இது நாள் வரை தனது வாதத் திறமையால் கூறி வந்த மக்கள் முன் இன்று நான் செய்தது தவறு தான் என்றுக் கூறி அவர்கள் முன் எவ்வாறு தலை நிமிர்ந்து நடப்பது ! அவர்கள் நம்மைப் பொய்யர் என்றெண்ணி விடுவார்களே என்பதும்

இதை விட நல்லதோ, கெட்டதோ தான் செய்தது சரி தான் என்ற நிலையில் உறுதியாக நின்று விடுவோம் என்று சமுதயாத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டு அவரால் அநீதியிழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் நற்செயல்களை மட்டும் முற்படுத்திக் கொண்டிருப்பார். 

தன்னால் அநீதியிழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் அவர் எத்தனை தான் இறைவனுக்கு விருப்பமான நற்செயல்களை முற்படுத்தி மலைப் போன்று நன்மைகளை சேர்த்துக் கொண்டு சென்றாலும் அவைகளால் அவர் செய்த மனித உரிமை மீறல்களுக்கு பகரமாகாது. அவைகளைக் கொண்டு அவர் சொர்க்கம் செல்ல முடியாது. அவர் சேர்த்துக் கொண்டு வந்திருந்த நன்மைகளை எடுத்து அவரால் பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான் அதனால் நன்மைகளை இழந்த அவர் நரகில் தள்ளப்படுவார். 

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)2 (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 2449.

இறைவனுக்காக செய்ய வேண்டிய சில வணக்கங்களில் குறைபாடுகள் இருந்தால் ( இணைவைப்பில்லாமல் ) அதை இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தலாம் அதை இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.  

அதேப் போன்று தனக்குத் தானே சரீர சுகத்திற்காக இஸ்லாம் தடைசெய்துள்ள தீமைகளை அனுபவித்திருந்தால் அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தினால் அதையும் இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.
 
ஆனால் ஒருமனிதன் தன்னைப் போன்ற பிற மனிதனுக்கு வரம்பு மீறி இழைத்த அநீதிகளுக்காக சம்மந்தப் பட்டவரிடம் பேசி தீர்த்துக் கொள்ளாமல் அவருடைய மனதை குளிரச் செய்யாமல் இறைவனிடம் மட்டும் பாவமன்னிப்புக்கோரி நற்செயல்களை முற்படுத்தினால் அந்த நற்செயல்கள் அவருக்குப் பலனலிக்காமல் போவதுடன் அவருக்கு இறைவனால் பாவமன்னிப்பும் கிடைக்காது.

  • தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !
  • தவறு செய்யக் கூடியவனே மனிதன் !
  • ஆனால் தான் செய்த தவறுக்காக வருந்த வேண்டும் !
  • திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
  • வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

என்று அழகாக தமிழ் கவிஞன் எழுதினான். மனிதன் என்பவன் வருந்தித் திருந்தி தனது தவறுகளை சீர் படுத்திக் கொண்டு தானும் வாழவேண்டும் தன்னைப் போல் பிறரும் வாழ வேண்டும் என்றக் கொள்கையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 

2:134, 2:135 வசனத்தில் இறைநம்பிக்கையாளர்கள் தெரிந்து கொண்டே ஒருத் தவறை செய்ய முயற்சிக்க மாட்டார்கள் அவ்வாறு செய்து விட்டாலும் அதில் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றும் இறைவன் கூறுகிறான் இந்த உபதேசத்திற்கு மாற்றமாக ஒருவர் நடந்து கொண்டால் அவர் என்னப் படித்திருந்தாலும் இறைநம்பிக்கையாளருக்கு எதிர் மறை இறைமறுப்பாளர். ...''தெரிந்து கொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்து இருக்கமாட்டார்கள்.'' திருக்குர்ஆன் 03:135

உன் சகோதரனைப் பார்த்து புன்முறுவல் பூப்பதும் நற்செயல் என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இதனால் அவருடைய மனம் குளிரும் ஒரு மனிதன் பிற மனிதனுடைய மனதை குளிரச் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் நற்செயல்கள் ஆகும் நற்செயல்களின் மூலமே நன்மைகள் பெருகும் நன்மைகள் மூலமாகவே சுவனத்தின் சுகந்த காற்றை நுகர முடியும். 

கழுத்தறுப்பு வேலையில் ஈடுபடுவது, மனதை நோகடிக்கும் செயல்களில் ஈடுபடுவது, போன்ற அனைத்தும தீய செயல்கள் தீய செயல்கள் அனைத்தும தீமைகளை உண்டாக்கும் தீமைகள் மூலமாகவே நரகிற்கு தள்ளப்படுவார்ள். 

உலகில் வாழும் காலத்திலேயே நீங்கள் பிறருடைய உயிர, உடமைகள். மான மரியாதையின் மீது கை வைத்திருந்தால் அதை இலோசாக எண்ணி விட்டு விடாமல் மேற்காணும் முடித்து ஃபைலை மூடி விடுங்கள்.

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நூல்: புகாரி   2447. '


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்