சனி, 10 செப்டம்பர், 2011

தவ்பாவை நாடும் உள்ளம்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

إِلاَّ الَّذِينَ تَابُواْ وَأَصْلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَـئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ

மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன். 2:160

தவ்பாவை நாடும் உள்ளம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

எல்லா மக்களும் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உலகில் வாழும் காலத்திலேயே சொர்க்கம் செல்வதற்கு தேவையான நற்செயல்களை செய்து   தீயசெயல்களை தடுத்துக் கொள்வதற்காக ஏராளமான தூதர்களை மக்களிலிருந்தே தேர்வு செய்து அவர்களுக்கு முன்மாதிரியாக இறைவன் வாழச் செய்தான்.

இறைவன் அறிவித்துக் கொடுத்தப் பிரகாரம் இறைத்தூதர்கள் அனைவரும் நல்லதை ஏவித் தீயவைகளைத் தடுத்து வாழ்ந்து காட்டியதுடன் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் அவ்வப்பொழுது சில தவறுகள் ஏற்படும் பொழுது மக்கள் அறியும் விதமாகவே இறைவனிடம் பாவமன்னிப்பு கோரக் கூடியவர்களாக இருந்தார்கள். நீங்களும் தவறிழைத்து விட்டால் இதேப் போன்று இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்றும் கூறினார்கள்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை சிறு சிறு தவறுகளைச் செய்து விட்டு இறைவனிடம் அழுது பிரார்த்தித்த சம்பவங்கள் திருமறைக்குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக காணப்படுகின்றன.

நபிமார்கள் செய்ததுப் போன்ற சிறு சிறு தவறுகளுக்குத் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் பெரும் பாவங்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்ற சிந்தனை மக்களுடைய மனதில் வந்து விடக்கூடாது என்பதற்காக தனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக அவர்களுக்கு முந்தைய யூத சமுதாய மக்களில் ஒருவர் 99 கொலைகளை செய்தப் பின்னர் அவரது உள்ளம் தவ்பாவை நாடியதையும. அதை ஏற்று இறைவன் அவருக்கு பாவமன்னிப்பு வழங்கிய சம்பவத்தையும் சொல்லிக்காட்டினான்.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் 99 பேரை கொலை செய்திருந்தார்.பிறகு அவர் (இம்மாபெரும் கொடிய பாவங்களிலிருந்து தவ்பாச் செய்து மீளுவதற்குரிய வழி முறைகளைத் தெரிந்து கொள்வதற்காக பூமியிலேயே மிகப்பெரிய அறிஞர் யார் என விசாரித்து பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரைச் சேர்ந்த ஓர் அறிஞரை பூமியில் மிகப்பொரிய அறிஞர்(இவர் தான்)என அவருக்குக் கூறப்பட்டது  அவரிடத்தில் சென்று  தான் 99 பேரைக் கொன்று விட்டதைக்கூறி தனக்கு தவ்பா ( பாவமன்னிப்பு )  கிடைக்குமா ? என்றுக்கேட்டார். அதற்கு அவ்வறிஞர் கிடைக்காது என்று பதிலளித்தார் உடனே அவரையும் அவ்விடத்திலேயேக் கொன்றார். அவரோடு   சேர்த்து 100  கொலைகள்  ஆகி விட்டது அத்துடன் அடங்காமல் அவர் உள்ளம் தவ்பாவை நாடியது. அதனால் மீண்டும் இப்பூமியில் யார் மிகப்பெரிய அறிஞர் என தேடத் தொடங்கினார் அவருக்கு ஓர் அறிஞரை அறிமுகப் படுத்தப்பட்டது. அவரிடத்தில் சென்று தான் 100 பேரைக்கொன்றது பற்றிக் கூறி எனக்கு தவ்பா  உண்டா? எனக்கேட்டார் அதற்கவர் ஆம் உண்டுஉமக்கும் தவ்பாவுக்கும் மத்தியில் யார்  தடையாக இருக்க முடியும்? நீ இன்ன இன்ன இடங்களுக்கு செல்! அங்கு அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கும் நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நீயும் வணங்கு ! உனது பழைய இடத்திற்கு திரும்பி செல்லாதே ! இது கெட்ட பூமியாகும் எனக் கூறினார். அதன் படி அம்மனிதர் பாதி தூரம் நடந்திருப்பார் அதற்குள் அவருக்கு மரணம் வந்து விட்டது. அவரது உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் ரஹ்மத்துடைய(இறையருளின்) வானவர்களுடன் அதாபுடைய ( இறை வேதனையின் ) வானவர்களும் போட்டி போட்டுக் கொண்டனர். அவர் தவ்பாச் செய்தவராக, தன் இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவராக வந்தார் என ரஹ்மத்தின் வானவர்களும், அவர் எந்த நற்செயல்களையும் செய்யவில்லை என அதாபுடைய வானவர்களும் வாதாடினர் அப்பொழுது ஒரு மலக்கு மனிதனின் வடிவத்தில் அவர்களிடம் வந்தார். அவரை அவர்கள் தங்கள் மத்தியில் தீர்ப்பளிப்பவராக ஆக்கிக் கொண்டார்கள். அவர் கூறினார்.  அவர் வந்த மற்றும் போக வேண்டிய பூமிகளை அளந்து பாருங்கள் அவ்விரண்டு பூமிகளில் எதற்கு நெருக்கமானவராக  இருக்கிறாரோ அவர் அதற்கே உரியவர் என்றுக் கூற அதன் படியே அவர்கள் அளந்தார்கள். அவர் தவ்பாவை நாடி வந்த பூமிக்கே மிக நெருக்கமானவராக இருந்தார். ஆகவே ரஹ்மத்தின் மலக்குகளே அவருடைய உயிரை கைப்பற்றினர் என்று அல்லாhஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : புகாரி, முஸ்லிம்

புகைப் பிடித்தோம், மது அருந்தினோம், அதற்கடுத்து விபச்சாரத்தை நாடினோம், அதற்கடுத்து சூது விளையாடினோம் இவைகளை அனுபவிப்பதற்காகத் திருடினோம், காசுக்காக கொலை செய்தோம் என்றெண்ணி முன்னர் செய்தப் பாவங்களை பட்டியலிட்டுப் பார்த்து இத்தனைப் பாவம் செய்த நமக்கா பாவமன்னிப்பு கிடைக்கப் போகிறது ?
  • ஒரு தடவை தண்ணி அடிச்சாலும், நூரு தடவை தண்ணி அடிச்சாலும் நரகம் ஒன்று தான்,
  • ஒருதடவை விபச்சாரம் செய்தாலும் நூறு தடவை விபச்சாரம் செய்தாலும் நரகம் ஒன்று தான்
  • ஒரு கொலை செய்தாலும் நூரு கொலை செய்தாலும் நரகம் ஒன்று தான்

என்றெல்லாம் தமக்குத் தாமே வேதாந்தம் பேசிக்கொண்டு எஞ்சி இருக்கும் சிறிது காலத்தையும் இதே வழியில் இன்பம் அனுபவித்து விட்டு சென்று விடுவோம் என்று தவ்பாவை நாடிய உள்ளத்தை கழுவித் தூய்மையாக்க வேண்டியவர்கள் மீண்டும் சாக்கடையில் தோய்த்துக் கொண்டிருப்பர்.

நரகம் என்ற தீர்ப்பு ஒன்று தான் ஆனால் அதில் வேதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும் நெருப்பால் தோல்கள் கருகியப்பின்னர் மறு தோல் போர்த்தி மீண்டும் மீண்டும் எரிக்கப்படும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

பாவம் செய்த மனிதன் பாவமன்னிப்புக் கோரி எனது அருளைப் பெற்று நேர்வழிப் பெற மாட்டானா என்று இறைவன் நாடுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான்., ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அது அதிகமாக இருக்கும்.... என்றுப பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். நூல்: முஸ்லிம்.

எப்பொழுது உள்ளம் தவ்பாவை நாடுகின்றதோ அப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட வேண்டும் அவ்வாறு செய்து விட்டால் அவர் பட்டியலிட்டுப் பார்த்துத் தயங்கும் அவருடைய முந்தைய எண்ணற்றப் பாவங்களை மன்னிப்பதுடன் அவைகளை நன்மைகளாகவும் மாற்றி விடுவதாக இறைவன் கூறுகிறான்.

திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன். 25:70.

சில நிபந்தனைகள்

இன்னும் கொஞ்சம் அனுபவித்து விட்டு பாவமன்னிப்புக் கோரலாம் என்று கால தாமதம் செய்யக் கூடாது காரணம் எவரது உள்ளம் எப்பொழுது தவ்பாவை நாடியது என்பதையும், என்ன நோக்கத்தில் அவர் அதை தள்ளிப் போட்டுக் கொண்டு சென்றார் என்பதையும் இறைவன் துல்லியமாக அறியக் கூடியவன் என்பதால் மேற்காணும் இஸ்ரவேலர் சம்பவத்தை தவறாக பயன்படுத்திட முயற்சிக்கக் கூடாது. 

இதற்கு மேலும் என்னால் பாவகாரியங்களில் ஈடுபடமுடியும் என்றளவுக்கு ஆரோக்கியம் இருக்கும் பொழுதே பாவமன்னிப்புத் தேட வேண்டும் அந்த இஸ்ரவேலர் 99 கொலைகளை செய்து முடித்திருந்தாலும் ஆரோக்கியம் குன்றாதவராகவே இருந்தார் ஆரோக்கியம் குன்றாதவராக இருந்த காரணத்தால் தான் இன்னொரு கொலையும் அவரால் செய்ய முடிந்தது.

இதற்கு மேல் எழுந்து நடக்க முடியாது என்ற நிலையில் ஆகாரம் டியூப் மூலம் மூக்கு வழியாக ஏறும் நிலையை அடைந்ததன் பின்னர் ஒருவர் கூறும் தவ்பா மரண பீதியில் உளறும் உளறல்களில் அடங்கி விடும் தவ்பாவில் சேராது. காரணம் நானே இறைவன் என்றுக் கூறி படாடோபமாக வாழ்ந்த ஃபிர்அவ்ன் மூக்கு வழியாக கடல் நீர் உட்புகுந்து மூச்சுத் திணறும் தருவாயை அடைந்தப் பின்னர் கூறிய தவ்பாவை இறைவன் நிராகரித்து விட்டான் என்பது இதற்கு உரிய ஆதாரமாகும்.

அதற்கான கீழகாணும் திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரம்.

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். திருக்குர்ஆன்.  4:18

 (மரணத்தருவாயில்) தொண்டைக்குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை அல்லாஹ் தன் அடியானின் தவ்பாவை ஏற்றுக்கொள்கிறாhன் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்  கூறினார்கள் நூல்: திர்மிதி

இதுவே பாவமன்னிப்புத தேடுவதற்கான அளவு கோல் பாவகாரியங்களின் எண்ணிக்கை அளவுகோல் இல்லை.

திருந்தியப் பின்னர் பழைய வழிக்கு திரும்பி விடக் கூடாது என்பதற்காகவே அந்த அறிஞர் பழைய பூமிக்கு திரும்பி விடாதே என்றுக் கூறுகிறார். வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல அந்த ஊரிலேயே அந்த மக்களுடனேயே தங்கி வாழலாம் ஆனால் அந்த ஊரில் வணக்க வழிப்பாடுகளுடன் உள்ள மக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பட்சத்தில் அது அவரால் வழி கெடுக்கப்பட்டவர்ளுக்கும், அவரை வழிகெடுத்தவர்களுக்கும் முன்மாதிரியாகி விடும். இதல்லவோ வாழ்க்கை என்று இவரைப் பார்த்து இவரால் வழிகெடுக்கப்பட்டவர்களும், இவரை வழிக் கெடுத்தவர்களும் தங்களை சீர் திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

திருந்தியப் பின் மீண்டும் பழைய வழிக்கு ( பாவச் செயல்களின் பக்கம் ) திரும்பி விட்டால் அவர் மீது இறைவனின் கடும் கோபம் ஏற்படும். 

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு...16:106



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

அன்றும் கொடுப்பான், நின்றும் கொடுப்பான்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன். 40:60

அல்லாஹ் அன்றும் கொடுப்பான், நின்றும் கொடுப்பான்.அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பொக்கிஷங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனின் அடியார்கள் கேட்கும் பொழுது இல்லை என்று சொல்லாமல் கைநிறைத்து அனுப்பக் கூடிய கருளையாளன் ஆவான்.

கொடையாளனும், கருணையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து கை நிறையப் பெற்றுக்கொள்ள  வேண்டுமென்றால்? அவனின் கருணைக்கு உகந்த அடியாராகத் திகழ வேண்டும்,

கையேந்துபவர்

கையேந்துவதற்கு முன் அவருடைய உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டும்,

  • அவரது நாவு திக்ருகளால் (இறைவனை துதிப்பதில்) திளைத்திருக்க வேண்டும்.
  • அவரது எண்ணங்கள் ஹலாலானவைகளை நாடி இருக்க வேண்டும்,
  • அவரது கரங்கள் ஹலாலானவைகளை ஈட்டி இருக்க வேண்டும்,
  • அவரது உடல் உறுப்புகள் ஹலாலானவைகளை அனுபவித்திருக்க வேண்டும்.
 
இதன் பின்னரே, அவரால் இறைவனை நோக்கி ஏந்தப்பட்ட அவரது கரங்கள் வெறுமனே திருப்பி அனுப்பப்படுவதில்லை. 

''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;.... 40:60

...அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்'' (எனவும் அவர் கூறினார்.) 7:87

அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். ஏனெனில், தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் விரும்புகிறான். ஆதார நூல்: திர்மிதி.

கருளையாளனாகிய அல்லாஹ் அவனிடம் பிரார்த்திப்போரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான், தீர்ப்பும் கூறுகிறான், அந்த தீர்ப்பு நிறைவேறும் காலத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு விடுவான்.

பிறருக்கும், தனக்கும் தீங்கு விளைவிக்காத நியாயமான எந்தக் கோரிக்கையையும் இறைவன் மறுப்பதில்லை. 

பாவமான காரியங்களுக்காகவும், இரத்தபந்த உறவுகளை துண்டிப்பதற்காகவும் கேட்கப்படும் பிரார்த்தனைகளைத் தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளப்படும்' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புஹாரி.

அன்றும் நடக்கும், நின்றும் நடக்கும்.

பிராரத்திப்போரின் பிரார்த்தனைகளில் சிலவற்றை அன்றே நிறைவேற்றியும் கொடுப்பான், சிலவற்றை நின்றும் (காலம் தாழ்த்தி) நிறைவேற்றிக் கொடுப்பான்.

எத்தனையோ முறை அழுதுகேட்டும் காரியம் நடப்பதாக தெரியவில்லையே என்று பிராரத்திப்போருக்கு அல்லாஹ்வின் ஆற்றலின் மீது நம்பிக்கையற்ற சிந்தனை எழலாம். ( ஷைத்தான் இவ்வாறு சிந்திக்கத் தூண்டுவான்) இதன் காரணமாகவே உருவானது தான் தர்ஹாக்களும், பால்கித்தாபு ஜோதிடர்களும்.  

நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.

அண்ணல் அவர்களின் வாழ்வினிலே...

அகிலம் அனைத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்)அவர்களின்  நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்விடம் கையேந்தி கேட்ட பிரார்த்தனைகளில் சிலவற்றை அல்லாஹ் அன்றே நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறான், சிலவற்றை காலம் தாழ்த்தியும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றான்.

அண்ணல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் விரக்தி அடைந்து வேறு வழியைத்தேடி ஈமானை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது ஏகத்துவத்தில் உறுதியாக நிற்பதுடன் பிறருக்கும் முன்மாதிரியாகி விடலாம். 

அன்றே நிறைவேற்றப்பட்ட பிரார்த்தனை.
இறைத்தூதர்(ஸல்)அவர்களும், அபூபக்ர்(ரலி) அவர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றுக் கொண்டிருந்த பொழுது அபூபக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்களுக்குப் பின்னால் ஒரு குதிரை வீரர் (சுராகா) என்பவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர் அவர்களே! ஒருக் குதிரை வீரர் நம்மை நெருங்கி விட்டார் என்றுக்கூறினார்கள். திரும்பிப்பார்த்த இறைத்தூதர்(ஸல்)அவர்கள் இறைவா! அவரைக் கீழே விழச்செய்! என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது பிறகு குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றதும். குதிரை வீரர் சுராகா மனம் திருந்தி, 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள் (நிறைவேற்றுகின்றேன்) என்றுக்கூறினார். அதற்கு இறைத்தூதர் (ஸல்)அவர்கள், இங்கேயே நின்றுகொண்டு எங்களை பின்தொடர்ந்து வரும் எவரையும் (எங்களை பின் தொடர) விட்டு விடாதே என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார்...புகாரி 3911. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

புளுதியை கிளப்பிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவரும் குதிரையை இன்னும் வேகமாக விரட்டிக்கொண்டு கையில் ஆயுதத்துடன் அண்ணல் அவர்களை குறிவைத்தவராக நெருங்கிக் கொண்டிருக்கின்றார்.

அது கண் இமைக்கும் நேரத்தில் அண்ணல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதால் ஞானம் நிறைந்த அல்லாஹ் அண்ணல் அவர்களின் பிரார்த்தனையை தாமப்படுத்தாமல் அதே இடத்தில் நிறைவேற்றிக் கொடுத்து, கொல்ல வந்தவரையே அவர்களுக்கு எல்லை பாதுகாப்பு வீரராக மாற்றி விடுகின்றான்.   

நின்று நிறைவேற்ப் பட்டப் பிரார்த்தனை.

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் கஃபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்? என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் (இறைவனிடம் சிரம் பணிந்து கொண்டிருக்கும் பொழுது) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்)அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே (சிரம் பணிந்த நிலையிலேயே) க்கிடந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறை»களை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்கு எதிராக  நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறை»களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநதார்கள்...

பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, யா அல்லாஹ்! அபூஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்றுக் கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்.ஆதாரம் புகாரி4:250.
இத்தனைப் பெரிய அநீதிக்காக அல்லாஹ்விடம் கரம் உயர்த்தி அவனின் தூதர் கேட்டப் பிரார்த்தனைக்கு பதிலளித்து தீர்ப்புக் கூறிய அல்லாஹ் அது நிறைவேற்றப்படும் காலத்தை சுமார் பத்து வருடங்கள் பிற்படுத்தினான்.

நின்று நிறைவேற்றப்பட்டதால் உருவான  நன்மைகள்.

அண்ணல் அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்தப் பின்னர்
குரைஷிகளின் மக்களில் சிலரை சிறிது சிறிதாக அண்ணல் அவர்களின் சத்தியப்பிரச்சாரத்தில் இணையச் செய்கிறான்,

  • அவர்களை ஒருக் கூட்டமாக்குகிறான்,
  • அவர்கள் ஒருக் கூட்டமாகியதும் அவர்களுக்கு ஒரு நாட்டை (மதீனாவை) ஏற்படுத்துகிறான்.
  • அந்த நாட்டில் (மதீனாவில்) அவர்களை அதிபதியாக்குகிறான்.

அண்ணல் அவர்களின் பிடரியின் மீது ஒட்டகக் குடலை போட்டு அவர்கள் மூச்சுத் திணறுவதைக் கண்டு ரசித்த ஈரலில் ஈரமில்லாதவர்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் பத்ரு யுத்த களத்திற்கு ( வரமறுத்தவர்களையும்) கொண்டு வந்து சேர்க்கிறான். அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் சாதாரண மக்கள் அல்ல,
அதிகாரத்தில் கோலோச்சுபவர்களாகவும்,

  • அன்றைய மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும்,
  • புத்தி கூர்மை மிக்க அபுல் ஹிக்கம் களாகளாகவும்,
  • போர் தந்திரிகளாகவும்,
  • எண்ணற்றப் போர்களில் வெற்றி வாகை சூடியவர்களாகவும் திகழ்ந்தவர்கள். 

மக்களில் செல்வாக்கு மிக்கவர்களை, அதிகாரத்தில் கோலோச்சியவர்களை போர் படை தளபதிகளை மாவீரர்களை மனிதர்களின் அரசனாகிய வலிமை மிக்க அல்லாஹ் மண்ணை கவ்வச் செய்து பாழும் கிணற்றில் வீசச் செய்தான். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது ஆணையாக நபி(ஸல) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ்கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்.

அன்று அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அநீதியாளர்களை அல்லாஹ்விடம் பெயர் கூறி ஒப்படைத்த பொழுதே அநீதியாளர்களை அவ்விடத்திலேயே அழித்திடும் வல்லமை மிக்கவன் அல்லாஹ் என்பதை எல்லோரும் அறிந்திருக்கின்றோம் ஆனாலும் தாமதப்படுத்தியதன் மூலமாக பொறுமையின் பொக்கிஷமாகிய அண்ணல் அவர்களுக்கு ஏராளமான நன்மைகளை ஏற்படச் செய்தான் நீதியாளன் அல்லாஹ்.
பத்ரில் வெற்றியைக் கொடுத்தான்,

பத்ரில் பிடிக்கப்பட்டை கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த கல்விமான்கள்; கிடைத்தனர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மூலமாக இஸ்லாமிய அணியினருக்கு கல்வி புகட்டப்பட்டது.

அப்பாஸ்(ரலி) போன்றவர்கள் பத்ரில் கண்ட சில அதிசயத்தக்க நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் இஸ்லாத்தை தழுவினர். (முந்தைய பிரார்த்தனையில் சுராக்கா அவர்களை இறைவன் பரிசாக்கினான், இந்தப் பிரார்த்தனையில் அப்பாஸ் ரலி போன்ற அறிஞர்களை பரிசாக்கினான். )

இந்த யுத்தத்தின் பிறகே மதினாவின் யூதர்கள் அரசின் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்தனர்,

மதீனாவின் சுற்றுப்புறத்தில் உள்ள யூதர்களின் சிற்றரசுகள் மதீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

மதீனாவிற்கு வெளியில் உள்ள வல்லரசுகளின் பார்வை மதீனாவை நோக்கி திரும்பியது.

இதன் பின்னரே இந்தப் பொறுமையாளர்களைக் கொண்டு உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஏகஇறைவனாகிய அல்லாஹ் நேர்வழி காட்டச் செய்தான்

முஸீபத்துகளும் நீங்கும். .
நாமே ஆச்சரியத்தின் விளிம்பிற்கு செல்லுமளவிற்கு பல சம்பவங்கள் நம் வாழ்வில் நடப்பதுண்டு.

  • விபத்துகளிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம்,
  • திருட்டு வழிப்பறியிலிருந்து தப்பித்திருப்போம்,
  • தீராத நோயென்று கைவிடப்பட்ட கேஸிலிருந்து நிவாரணம் பெற்றிருப்போம்,
  • எவரிடமிருந்தாவது ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்போம்,

இதுமாதிரியான சம்பவங்களின் போது அல்லாஹ்வே நம்மைக் காப்பாற்றினான் என்று நம்மை அறியாமல் நம்முடைய நாவு மொழியத் தொடங்கியதை ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏராளமான சம்பவங்கள் மூலம் உணர்ந்திருக்கின்றோம். கையேந்தியவரின் முஸீபத்துகளை இந்த வழிகளிலும் இறைவன் போக்குவான். 

மறுமையிலும் கிடைக்கும்.

இன்னும் இறைநம்பிக்கiயாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கை ஒன்றுடன் முடிவதில்லை, மாறாக இன்னுமொரு வாழ்க்கை மரணத்திற்குப்பின் உண்டு என்ற நம்பிக்கையில் தடம் புரளாமல் வாழ்பவர்  சொர்க்கம் செல்லும் அளவுக்கு நன்மைகள் அவரிடம் இல்லாமல் இருந்தால் துனியாவில் கேட்டப்  பிரார்த்தனைகளுக்கான கூலிகளை குறைவன்றி கொடுத்து சொர்க்கத்தில் நுழைவிப்பான் அல்லது நரகின் தண்டனை நாட்களை குறைப்பான் நீதியாளன் அல்லாஹ். 

  • நாம் கேட்டது உடனே இம்மையில் கிடைக்கும
  • நாம் கேட்டதற்கு ஈடாக தீங்கிலிருந்து நம்மை காப்பான்.
  • நாம் கேட்டதற்கு ஈடாக மறுமையில் கிடைக்கும்.
என்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: ஹாக்கிம்

படிப்பினைகள்
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னார் தான் காரணம் என்று உறுதியாகத் தெரிந்தால் அவர்களின் பெயரைக்கூறி இறiவா! இன்னாரை நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

இன்னார் தான் என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால்? எனக்கு அநீதி இழைத்தவர்களை இறiவா! நீ பார்த்துக்கொள் என்றுக்கூறி ஒப்படைத்து விட்டு பொறுமையை கை கொள்ள வேண்டும்.

தனது சொந்த தேவைகளுக்காக அல்லாஹ்வின் அருளை நாடினால் அதற்காகவும் பெறுமையை கை கொள்ள வேண்டும் 

பிரார்த்திப்போரின் பிராரத்தனைகளில் எதை அன்றே நிறைவேற்றினால் அடியானுக்கு நன்மை பயக்கும், எதை நின்று (நிதானமாக) நிறைவேற்றினால் அதுவும் அடியானுக்கு நன்மை பயக்கும், என்கின்ற ஞானம் நிரம்பப் பெற்றவன் அல்லாஹ் என்பதால் அவைகள் நிறைவேறுவதற்கான காலத்தைக் குறித்து அந்தந்த நேரத்தில் அவைகளை தாமாக நிறைவேறச் செய்திடுவான்.
 
நான் பிரார்த்திக்கிறேன், எனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, என்றுக்கூறி அவசரப்படாத வரையில் உங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


புதன், 7 செப்டம்பர், 2011

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! ''என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக்கூறினார்கள்... இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1742.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஒருவர் புனித தலத்தில் இருக்கும் பொழுது இறைவன் தடை செய்த எந்த ஒன்றையும் எந்தளவுக்கு செய்யத் துணிய மாட்டாரோ அந்தளவுக்கு புனித தலமல்லாத மற்ற இடங்களிலும் மனித உயிர்கள், அவர்களது உடமைகள், அவர்களது மான மரியாதையின் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது புனித தலத்தை மதிப்பதுப் போன்று மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றுப் பெருந்திரளாகக் குழுமி இருந்த அரஃபா மைதானத்தில் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினார்கள். 

அதிகார பலத்தைக் கொண்டோ, பண பலத்தைக் கொண்டோ, படை பலத்தைக் கொண்டோ, அல்லது தவறான தகவல்களின் அடிப்படையிலோ மேற்காணும் அநீதிகளில் எதையாவது ஒன்றை இழைத்து விட்டால் ? அதற்கான தீர்வு என்ன

  • அவருடைய மான மரியாதைக்கு பங்கம் விளைவித்திருந்தால் அதற்காக அநீதி இழைக்கப்பட்டவரிடம் நேரடியாக சென்று வருத்தம் தெரிவித்துக்கொண்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
  •  
  • அவருடைய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தி இருந்தால் இழப்புககு தகுந்தாற்போல் ஈடு கட்டி விட்டு  படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
  • யாரையாவது கொலை செய்திருந்தால் அரசிடம் சரணடைந்து அரசு மூலம் கொலையாளிகளின் வாரிசுகளிடம் மன்னிப்பையோ, அல்லது நஷ்ட ஈட்டுத்தொகையையோக் கொடுத்துவிட்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

மிகவும் சாமார்த்தியமாக தான் செய்த தவறுக்கு நியாயாம் கற்பித்தக் கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தால் பாதிக்கப்பட்டவர் இறைவனிடம் கையேந்தி இறைவா ! நீ இவரைப் பார்த்துக் கொள் என்று கண்ணீர் மல்க ஒப்படைத்து விட்டால் இறைவன் அவருக்கு அதேப் போன்றதொரு இழப்பை அல்லது அதற்கு மேலான ஒன்றை தன்னுடைய திறமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதவாறு அவரை விட திறமைசாலி ஒருவர் மூலமாக அல்லது அவருக்கு அறியாப் புறத்திலிருந்து அவர் சற்றிலும் எதிர்பாராத வகையில் திடீரென ஏற்படுத்தி விடுவான் அவ்வாறு ஏராளமான சம்பவங்கள் நம் கண் முன் நிகழ்ந்திருக்கிறது. காரணம் அநீதி  இழைக்கப்பட்வருடைய பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரை இல்லை.
 
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். நூல்: புகாரி  இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 2448. 

இவ்வாறு மாட்டிக் கொண்டவர்களில் சிலர் இது இன்னாருக்கு நாம் செய்த துரோகத்தின் காரணத்தினால் நிகழ்ந்திருக்கலாம் அவர் இறைவனிடம் கையேந்திருப்பார் அதனால் இது இறைவனின் தீர்ப்பாக இருக்கலாம் என்று அஞ்சிக் கொண்டு அதன் பிறகு நற்செயல்களை முற்படுத்துவார் ஆனாலும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்க வழி செய்யாமல் தன் தவறை மறைத்தே வாழ்வார் நற்செயல்களை மட்டும் முற்படுத்துவார்.
அதற்கு காரணம்.

நான் செய்தது சரி தான் என் மீது எவ்வித தவறுமில்லை என்று இது நாள் வரை தனது வாதத் திறமையால் கூறி வந்த மக்கள் முன் இன்று நான் செய்தது தவறு தான் என்றுக் கூறி அவர்கள் முன் எவ்வாறு தலை நிமிர்ந்து நடப்பது ! அவர்கள் நம்மைப் பொய்யர் என்றெண்ணி விடுவார்களே என்பதும்

இதை விட நல்லதோ, கெட்டதோ தான் செய்தது சரி தான் என்ற நிலையில் உறுதியாக நின்று விடுவோம் என்று சமுதயாத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டு அவரால் அநீதியிழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் நற்செயல்களை மட்டும் முற்படுத்திக் கொண்டிருப்பார். 

தன்னால் அநீதியிழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் அவர் எத்தனை தான் இறைவனுக்கு விருப்பமான நற்செயல்களை முற்படுத்தி மலைப் போன்று நன்மைகளை சேர்த்துக் கொண்டு சென்றாலும் அவைகளால் அவர் செய்த மனித உரிமை மீறல்களுக்கு பகரமாகாது. அவைகளைக் கொண்டு அவர் சொர்க்கம் செல்ல முடியாது. அவர் சேர்த்துக் கொண்டு வந்திருந்த நன்மைகளை எடுத்து அவரால் பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான் அதனால் நன்மைகளை இழந்த அவர் நரகில் தள்ளப்படுவார். 

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)2 (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 2449.

இறைவனுக்காக செய்ய வேண்டிய சில வணக்கங்களில் குறைபாடுகள் இருந்தால் ( இணைவைப்பில்லாமல் ) அதை இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தலாம் அதை இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.  

அதேப் போன்று தனக்குத் தானே சரீர சுகத்திற்காக இஸ்லாம் தடைசெய்துள்ள தீமைகளை அனுபவித்திருந்தால் அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தினால் அதையும் இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.
 
ஆனால் ஒருமனிதன் தன்னைப் போன்ற பிற மனிதனுக்கு வரம்பு மீறி இழைத்த அநீதிகளுக்காக சம்மந்தப் பட்டவரிடம் பேசி தீர்த்துக் கொள்ளாமல் அவருடைய மனதை குளிரச் செய்யாமல் இறைவனிடம் மட்டும் பாவமன்னிப்புக்கோரி நற்செயல்களை முற்படுத்தினால் அந்த நற்செயல்கள் அவருக்குப் பலனலிக்காமல் போவதுடன் அவருக்கு இறைவனால் பாவமன்னிப்பும் கிடைக்காது.

  • தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !
  • தவறு செய்யக் கூடியவனே மனிதன் !
  • ஆனால் தான் செய்த தவறுக்காக வருந்த வேண்டும் !
  • திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
  • வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

என்று அழகாக தமிழ் கவிஞன் எழுதினான். மனிதன் என்பவன் வருந்தித் திருந்தி தனது தவறுகளை சீர் படுத்திக் கொண்டு தானும் வாழவேண்டும் தன்னைப் போல் பிறரும் வாழ வேண்டும் என்றக் கொள்கையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 

2:134, 2:135 வசனத்தில் இறைநம்பிக்கையாளர்கள் தெரிந்து கொண்டே ஒருத் தவறை செய்ய முயற்சிக்க மாட்டார்கள் அவ்வாறு செய்து விட்டாலும் அதில் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றும் இறைவன் கூறுகிறான் இந்த உபதேசத்திற்கு மாற்றமாக ஒருவர் நடந்து கொண்டால் அவர் என்னப் படித்திருந்தாலும் இறைநம்பிக்கையாளருக்கு எதிர் மறை இறைமறுப்பாளர். ...''தெரிந்து கொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்து இருக்கமாட்டார்கள்.'' திருக்குர்ஆன் 03:135

உன் சகோதரனைப் பார்த்து புன்முறுவல் பூப்பதும் நற்செயல் என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இதனால் அவருடைய மனம் குளிரும் ஒரு மனிதன் பிற மனிதனுடைய மனதை குளிரச் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் நற்செயல்கள் ஆகும் நற்செயல்களின் மூலமே நன்மைகள் பெருகும் நன்மைகள் மூலமாகவே சுவனத்தின் சுகந்த காற்றை நுகர முடியும். 

கழுத்தறுப்பு வேலையில் ஈடுபடுவது, மனதை நோகடிக்கும் செயல்களில் ஈடுபடுவது, போன்ற அனைத்தும தீய செயல்கள் தீய செயல்கள் அனைத்தும தீமைகளை உண்டாக்கும் தீமைகள் மூலமாகவே நரகிற்கு தள்ளப்படுவார்ள். 

உலகில் வாழும் காலத்திலேயே நீங்கள் பிறருடைய உயிர, உடமைகள். மான மரியாதையின் மீது கை வைத்திருந்தால் அதை இலோசாக எண்ணி விட்டு விடாமல் மேற்காணும் முடித்து ஃபைலை மூடி விடுங்கள்.

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நூல்: புகாரி   2447. '


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்